"பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற புது பெயர் வைத்த திமுக!": எதிர்க்கட்சித் தலைவர் காட்டம்
தமிழக முதல்வர் பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற பெயர் வைத்து தேவையே இல்லாமல் 3 கோடி ரூபாய் வீணடித்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். அரசு பள்ளிகளுக்கான நிதியை அதிகரிக்க 'நம்ம ஸ்கூல்' என்ற திட்டத்தைத் சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்கள், சமூக சேவகர்கள் போன்றவர்களிடம் இருந்து நிதியைப் பெற்று பள்ளிகளை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம். இது குறித்து நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பின்வரும் தகவல்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.
3 கோடி ரூபாய் வீணடிப்பு!
"கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக அரசால் சிஎஸ்ஆர் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசு பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த பிறரிடம் இருந்து நிதி பெறுவதற்கே இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு கீழ் 2019ஆம் ஆண்டிற்குள் ரூ.82 கோடி நிதி பெறப்பட்டிருந்தது. வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த திட்டத்தையும் அதன் இணையதளத்தையும் திமுக அரசு முடக்கியது. இது முடக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து நன்கொடைகள் வந்து கொண்டே இருந்ததால், தமிழக அரசு இதற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற பெயர் வைத்து இந்த திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் மிக எளிமையாகத் தொடங்கப்பட்ட திட்டத்தை, தற்போது நட்சத்திர ஹோட்டலில் நடத்தி ரூ.3 கோடியை வீணடித்துள்ளனர்." என்றும் இதற்கு ஏன் இவ்வளவு பணம் செல்வழிக்கப்பட்டது என்றும் அவர் வினவியுள்ளார்.