LOADING...
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை; மகள், மருமகன் வீடுகளிலும் ரெய்டு
முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை; மகள், மருமகன் வீடுகளிலும் ரெய்டு

எழுதியவர் Venkatalakshmi V
May 27, 2026
09:32 am

செய்தி முன்னோட்டம்

கேரள அரசியலில் ஒரு அதிரடித் திருப்பமாக, அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் சி.பி.ஐ(எம்) மூத்த தலைவருமான பினராயி விஜயன் இல்லம் உட்பட கேரளா முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை(ED) அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 'கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட்' நிறுவனத்திடமிருந்து, பினராயி விஜயனின் மகள் டி.வீணாவுக்குச் சொந்தமான 'எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்' நிறுவனம் எவ்வித சேவைகளும் வழங்காமல் பல கோடி ரூபாய் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக எழுந்த ஊழல் வழக்கின் தொடர்ச்சியாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைக் கேரள உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்த நிலையில், இன்று ரெய்டு அரங்கேறியுள்ளது.

அமலாக்கத்துறை

மகள், மருமகன் வீடுகளையும் முடக்கிய அமலாக்கத்துறை

முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடு மட்டுமன்றி, கோழிக்கோட்டில் உள்ள அவரது மருமகனும், முன்னாள் அமைச்சருமான பி.ஏ. முகமது ரியாஸ் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். பினராயி விஜயனின் மகள் டி. வீணாவின் கணவரான முகமது ரியாஸ் வீட்டிலும் ஒரே நேரத்தில் ரெய்டு நடப்பது கேரள அரசியல் வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி

என்னதான் பிரச்சினை? 'CMRL' ஊழல் வழக்கின் பின்னணி

கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் வருமான வரி இடைக்கால தீர்ப்பாயத்தின் அறிக்கையின் மூலம் இந்த விவகாரம் முதன்முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. கனிம நிறுவனமான CMRL-இடமிருந்து பினராயி விஜயனின் மகள் வீணாவின் 'எக்ஸாலாஜிக்' நிறுவனம் 2017 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் எவ்வித மென்பொருள் சேவைகளும் வழங்காமல் ரூ.1.72 கோடி கைமாறியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தை மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் (SFIO) விசாரித்த போது, வீணாவின் நிறுவனம் ஒட்டுமொத்தமாக ரூ.2.70 கோடி வரை சட்டவிரோதமாகப் பெற்றுள்ளதாகக் கண்டுபிடித்தது. இந்த CMRL நிறுவனத்தில் கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகம் (KSIDC) 13.4 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

குற்றப்பத்திரிகை

160 பக்க குற்றப்பத்திரிகையும் 10 ஆண்டு சிறை மிரட்டலும்

இந்த வழக்கில் பினராயி விஜயனின் பெயர் நேரடியாகக் குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை என்றாலும், அவரது மகள் டி. வீணா, CMRL நிர்வாக இயக்குனர் சசிதரன் கர்த்தா உட்பட 25 பேர் மீது SFIO 160 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. கடந்த 2025 ஏப்ரல் மாதம் மத்திய அரசு டி. வீணா மீது நிறுவனங்கள் சட்டம், 2013-ன் பிரிவு 447 (நிறுவன மோசடி) கீழ் வழக்குத் தொடர ஒப்புதல் அளித்தது. இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் மோசடி செய்யப்பட்ட தொகையைப் போல 3 மடங்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Advertisement