சென்னை நகை கடைகளில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை
சென்னையில் மொத்தமாக தங்க நகைகளை விற்பனை செய்து வரும் நகை கடை நிறுவனங்களில் அமலாக்கத்துறை நேற்று(நவ.,20) முதல் சோதனை செய்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சாஸ்திரி பவன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, நேற்று மணல்குவாரி முறைகேடு வழக்கில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்த டெல்லியில் இருந்து வந்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், விசாரணை நடத்திய பின்னர், தங்க நகைகள் மொத்தமாக விற்பனை செய்யப்படும் நிறுவனங்களுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன்படி சென்னை சவுகார்பேட்டை என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் அமைந்துள்ள மோகன்லால் ஜூவல்லர்ஸ், யானைக்கவுனி பகுதியிலுள்ள டிபி ஜூவல்லர்ஸ் இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனை முடிந்த பின்னர் பறிமுதல் குறித்த விவரங்கள் வெளியாக வாய்ப்பு
மேலும், ஜே.கே. நகை கடை, என்.எஸ்.சி. போஸ் ரோட்டிலுள்ள வெங்கடேஸ்வரா ஜுவல்லரி, பதிக் சேல்ஸ் பிரைவேட்.லிமிடெட்., சி.எஸ்.வி. இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், உள்ளிட்ட நிறுவனங்களில் அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் 2வது-நாளான இன்றும்(நவ.,21)அமலாக்கத்துறை அதிகாரிகள் இப்பகுதிகளில் தங்கள் சோதனையினை தொடர்ந்து தீவிரமாக நடத்தி வருவதாக தெரிகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் இந்நிறுவனங்களில் நடப்பதாக கூறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது என்றும், இந்த சோதனையின் முடிவில் பறிமுதல் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, கடந்த அக்டோபர் இதே போல் நடத்தப்பட்ட சோதனையில் என்.எஸ்.சி. போஸ் ரோட்டிலுள்ள ஓர் நகை கடையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கணக்கில் வரவு வைக்கப்படாத நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.