LOADING...
2026 சட்டப்பேரவைத் தேர்தல்: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் நாளை வெளியாக வாய்ப்பு
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் நாளை வெளியாக வாய்ப்பு

2026 சட்டப்பேரவைத் தேர்தல்: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் நாளை வெளியாக வாய்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 14, 2026
12:30 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட உடனே, அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும். கூடுதல் விவரங்கள் இங்கே:-

பதவிக்காலம்

பதவிக்காலம் மற்றும் தேர்தல் கட்டங்கள்

இந்த ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைப் பதவிக்காலம் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. குறிப்பாக: மேற்கு வங்காளம்: மே 7இல் முடிகிறது. தமிழகம்: மே 10இல் முடிகிறது. அசாம்: மே 20இல் முடிகிறது. கேரளா: மே 23இல் முடிகிறது. புதுச்சேரி: ஜூன் 15இல் முடிகிறது. வழக்கமாகத் தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும். ஆனால், மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் பாதுகாப்பு காரணங்களுக்காகப் பல கட்டங்களாகத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

முன்னேற்பாடுகள்

தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள்

தமிழகத்தில் தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் மொத்தம் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு தலைமை அலுவலர், மூன்று வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் எனப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சுமார் 3,45,160 பணியாளர்கள் நேரடியாகத் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, பிப்ரவரி கடைசி வாரத்தில் தேதிகள் அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த முறை மார்ச் நடுப்பகுதியில் அறிவிப்பு வெளியாக உள்ளதால், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

Advertisement