மனித கழிவுகள் கலக்கப்பட்ட தொட்டியை இடிக்க கோரிய DYFI சங்கத்தினர் கைது
புதுக்கோட்டை வேங்கைவயலில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து சாலை மறியல் செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை(DYFI) போலீஸார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை இறை யூர் ஊராட்சியை சேர்ந்த வேங்கைவயல் என்ற பகுதியில் பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தெரியவந்தது. இதற்காக வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஏடிஎஸ்பியின் தலைமையில் 11 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டது. ஆனால், சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின்னும் குற்றவாளிகள் யார் என்பது கண்டுபிடிக்கப்படாததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
சாலை மறியலாக மாறிய ஆர்ப்பாட்டம்
மேலும், வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்களுக்காக ரூ.7 லட்சம் செலவில் புதிய குடிநீர் தொட்டியின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு, "ஆதிதிராவிட சமூகத்தினருக்கு தனிக் குடிநீர் தொட்டி அமைக்கக்கூடாது. தேநீருக்கு இரட்டை குவளை கூடாதெனில்; குடிநீருக்கு இரட்டை தொட்டி கூடாது." என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் அண்மையில் கூறி இருந்தார். இந்நிலையில், மனித கழிவுகள் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை இடிக்க கோரி ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது சத்தியமங்கலம் பகுதியை தாண்டி சென்ற சங்கத்தினரை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். போலீஸாரின் இந்த செயலை கண்டித்தும் தொட்டியை இடிக்க கோரியும் DYFI சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போலீஸார் அவர்களை கைது செய்தனர்.