தமிழகத்தில் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ₹4,730 கோடி மணல் குவாரி முறைகேடு வழக்கில் புதிய திருப்பம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளில் நடைபெற்ற பெருமளவிலான முறைகேடுகள் தொடர்பான வழக்கின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) அதிகாரிகள் இன்று 30-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட சுமார் 30 மடங்கு வரை கூடுதலாக ஆற்று மணல் அள்ளப்பட்டதன் மூலமாக பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை (ED) ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
ஊழல்
₹4,730 கோடி ஊழல்: அமலாக்கத்துறையின் அறிக்கை
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம், தமிழகத்தில் இயங்கி வந்த 28 மணல் குவாரிகள் மூலம் சுமார் ₹4,730 கோடி அளவுக்கு ஊழல் மற்றும் நிதி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் மாநில காவல் துறை தலைமை இயக்குநருக்கு விரிவான கடிதம் அனுப்பப்பட்டது.
அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆதாரங்கள் மற்றும் பதிந்த வழக்குகளின் அடிப்படையில், தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறை புதிதாக வழக்குப் பதிவு செய்து இந்த சோதனையைத் தொடங்கியுள்ளது.
சோதனை
புதுக்கோட்டை, திண்டுக்கலில் தீவிர சோதனை
இன்று காலை முதலே புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரபல மணல் குவாரி உரிமையாளர் ரத்தினம் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மணல் குவாரி உரிமையாளர் ராமச்சந்திரன் என்பவரது வீட்டில், நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை சோதனை நடத்தி வருகிறது.
கறம்பக்குடியில் உள்ள மணல் குவாரி உரிமையாளர் கரிகாலன் வீட்டிலும், ஏம்பல் பகுதியில் மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி தலைமையிலான காவல் குழுவினரும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.