LOADING...
தமிழகம் முழுவதும் 62 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு; கட்டுக்கட்டாகச் சிக்கிய லஞ்சப் பணம்
62 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு

தமிழகம் முழுவதும் 62 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு; கட்டுக்கட்டாகச் சிக்கிய லஞ்சப் பணம்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 05, 2026
09:41 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் சுப முகூர்த்த நாள்களை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் நிலவும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பொதுமக்களிடம் பெரிய அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள 62 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் (DVAC) நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் விளைவாக, கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், முறைகேடுகளில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 3 சார் பதிவாளர்கள் (Sub-Registrars) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

லஞ்சம்

முகூர்த்த நாள் கூட்டத்தைப் பயன்படுத்திய அதிகாரிகள்

சுப முகூர்த்த நாள்களில் பொதுமக்கள் தடையின்றி பத்திரப்பதிவு செய்ய ஏதுவாக, தமிழக அரசு டோக்கன்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியிருந்தது. அதன்படி, வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்குப் பதிலாக 150 டோக்கன்களும், 200 டோக்கன்களுக்குப் பதிலாக 300 டோக்கன்களும் கூடுதலாக வழங்கப்பட்டு வந்தன. இந்தக் கூடுதல் கூட்ட நெரிசலையும், அவசரத்தையும் சாதகமாக்கிக் கொண்டு, இடைத்தரகர்கள் மூலம் ஆவணங்களை உடனுக்குடன் பதிவு செய்யப் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் பெருமளவில் லஞ்சம் கோருவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்தன.

ரெய்டு

62 இடங்களில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு

நேற்று காலை முதலே தேர்வு செய்யப்பட்ட 62 சார் பதிவாளர் அலுவலகங்களின் கதவுகள் பூட்டப்பட்டு, லஞ்ச ஒழிப்பு போலீஸார் துரித சோதனையில் இறங்கினர். சென்னை: ஆலந்தூர், விருகம்பாக்கம் ஆகிய அலுவலகங்களில் சோதனை தீவிரமாக நடைபெற்றது. மயிலாடுதுறை: கச்சேரி சாலையில் உள்ள அலுவலகத்தின் கதவுகள் பூட்டப்பட்டு, அங்கிருந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். தென் மாவட்டங்கள்: திருநெல்வேலி மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம் உட்பட 3 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் பிடிபட்டது. விருதுநகரில் ரூ.54,000, சாத்தூரில் ரூ.20,000 பறிமுதல் செய்யப்பட்டன. பிற மண்டலங்கள்: கோவை(தொண்டாமுத்தூர், காந்திபுரம்), தருமபுரி, தேனி(போடி), ராமநாதபுரம்(பரமக்குடி), விழுப்புரம், ஓசூர்(சூளகிரி), வேலூர்(வேலப்பாடி), மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களிலும் சோதனை நீடித்தது.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

சஸ்பெண்ட்

கட்டுக்கட்டாகச் சிக்கிய பணம்: 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

அலுவலகங்களில் இருந்த அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்களின் உடைமைகள் மற்றும் வாகனங்களை ஆய்வு செய்த போது, கணக்கில் வராத கட்டுக்கட்டான லஞ்சப் பணம் சிக்கியது. கள்ளக்குறிச்சி (மணலூர்பேட்டை) - ₹1,20,000; மதுரை (விளாங்குடி) - ₹90,000; திருச்சி (துறையூர், திருவெறும்பூர்) - ₹80,000 அரசுக்கு முறைகேடான பதிவுகள் மூலம் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாகவும், லஞ்சப் புகாரில் சிக்கியதாகவும் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 3 சார் பதிவாளர்களைப் பணியிடை நீக்கம் செய்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் குமரகுருபரன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் முழு பின்னணி மற்றும் இதில் தொடர்புடைய இதர உயர் அதிகாரிகள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement