காற்று மாசு அதிகரிப்பால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
தலைநகர் டெல்லியில் அவ்வப்போது காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் ஆபத்துகள் குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் தற்போது சென்னையிலும் காற்றின் தரம் நிர்ணயம் செய்ததைவிட மோசமாக உள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக நீரிழிவு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அதன்படி, சென்னை மற்றும் டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சென்னையை சேர்ந்த 6,722 பேரிடமும், டெல்லியில் 5,342 பேரிடமும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயர் ரத்த அழுத்தம் ஏற்படவும் இது வழிவகுக்கும் என அறிக்கை
தெற்காசியா கார்டியோ மெட்டபாலிக் ரிஸ்க் குறைப்பு மையம் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன் முடிவில், காற்று மாசுபாட்டிற்கும், நீரிழிவு நோய்க்கும் சம்மந்தம் உள்ளது என்பதை கண்டறிந்து அதனை உறுதி செய்துள்ளார்கள். மேலும், இளைஞர்கள் தற்போதைய காலகட்டத்தில் அதிகளவு நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதற்கு காரணமும் காற்றின் மாசுபாடு தான் என்றும் கூறப்படுகிறது. சர்வதேச பத்திரிகைகளில் இது குறித்த 2 ஆய்வின் முடிவு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, காற்று மாசுபாடு உயர் ரத்த அழுத்தம் ஏற்படவும் வழி வகுக்கிறது என்ற எச்சரிக்கையும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.