இந்தியப் பெருங்கடலில் ரூ.25,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
சனிக்கிழமை அன்று இந்திய கடல் பகுதியில் ரூ.25,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம்(NCB) மற்றும் இந்தியக் கடற்படையினர் இணைந்து நடத்திய சோதனையில் இந்த போதை பொருட்கள் சிக்கியது. இந்திய கடற்படையால் கைப்பற்றப்பட்ட உயர் தூய்மை மெத்தாம்பேட்டமைன் 2,525 கிலோ இடை கொண்டது. மேலும், இதன் மதிப்பு ரூ.25,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. NCB வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில் இவை தெரிவிக்கப்பட்டுள்ளன. 23 மணி நேரத்திற்குள் இவை கணக்கிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "உயர் ரக மெத்தாம்பெட்டமைன் என்பதால் இதற்கு மதிப்பு அதிகம். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 134 சாக்குகளில் இருந்தது. மெத்தாம்பெட்டமைன் தலா ஒரு கிலோ பாக்கெட்டுகளாக வைக்கப்பட்டிருந்தன" என்று அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை, மாலத்தீவு மற்றும் இந்தியாவில் விற்பதற்காக கடத்தப்பட்ட போதைப்பொருட்கள்
இது தொடர்பாக பாகிஸ்தானை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என NCB அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமையன்று, ஒரு சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட NCB, இந்திய கடல் பகுதியில் சுமார் 2,500 கிலோ போதைப்பொருட்களை கைப்பற்றியது. இதுவரை கைப்பற்றப்பட்ட போதை பொருட்களிலேயே இதற்கு தான் மதிப்பு அதிகம் என்று துணை இயக்குநர் ஜெனரல்(Ops) சஞ்சய் குமார் சிங் கூறினார். "NCB மற்றும் கடற்படை, இந்தியப் பெருங்கடலில் ஒரு வெற்றிகரமான நடவடிக்கையை நடத்தியது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவைகளாகும். இந்த சரக்கு இலங்கை, மாலத்தீவு மற்றும் இந்தியாவிற்காக கடத்தப்பட்டிருக்கிறது." என்று சிங் கூறியுள்ளார்.