சென்னைவாசிகளுக்கு தினமும் 1,000 எம்.எல்.டி. குடிநீர் விநியோகம் - அமைச்சர் கே.என்.நேரு
செய்தி முன்னோட்டம்
சென்னை மக்களுக்கு தினமும் 1,000 எம்.எல்.டி.குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை-நீலாங்கரை, கொட்டிவாக்கம், பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் ரூ.418.20 மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதேபோல் நீலாங்கரை பகுதிக்கு குடிநீர் வழங்கல் திட்டமானது ரூ.77.03 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இத்தகைய பணிகளுக்கு நேற்று(நவ.,6)நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரான கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்,
இந்த நிகழ்விற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் முன்னிலை வகித்தார் என்று கூறப்படுகிறது.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "இந்த பாதாள சாக்கடை திட்டம் மூலம் 12,776 குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டு 1,03,971 பேர் பயன்பெறுவர்" என்றும்,
"குடிநீர் வழங்கல் திட்டம் மூலம் 4,986 குடியிருப்புகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டு 42,206 பேர் பயனடைவார்கள்" என்றும் தெரிவித்தார்.
திட்டம்
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 150 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட நிலையம்
தற்போது கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.5,239.20கோடி மதிப்பில் 400 அல்லது 150 எம்.எல்.டி.உற்பத்தி திறன்கொண்ட உற்பத்தி நிலையங்கள் போன்ற குடிநீர் உற்பத்திக்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
சென்னைக்கு தினமும் 1,000 எம்.எல்.டி.குடிநீர் வழங்கப்படுகிறது என்று தெரிவித்த அவர்,
'ஒருநாளைக்கு 650 எம்.எல்.டி.குடிநீர் 16 கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் கொண்டு சுத்திகரிக்கப்பட்டு தொழிற்சாலை தேவைகளுக்கு வழங்கப்படுகிறது'என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 150-மில்லியன் லிட்டர் திறன்கொண்ட நிலையமானது ரூ.1,516.82கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு தற்போது 95%பணிகள் நிறைவடைந்துள்ளது.
மீதமுள்ள பணிகள் விரைவில் நிறைவடைந்து இந்நிலையம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இதன்மூலம் பெறப்படவுள்ள குடிநீர் வேளச்சேரி, சோழிங்கநல்லூர், உள்ளகரம் போன்ற 12 பகுதிகளில் வசிக்கும் சுமார் 9 லட்சம் மக்களுக்கு பயனளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.