வானில் 21 கிமீ உயரத்தில் சாதனை! இந்தியாவின் முதல் HAPS ஏர்ஷிப் சோதனையை வெற்றிகரமாக முடித்தது டிஆர்டிஓ
செய்தி முன்னோட்டம்
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), விண்வெளியின் ஸ்ட்ரேடோஸ்பியர் மண்டலத்தில் நீண்ட நேரம் நிலைநிறுத்தப்படக் கூடிய ஹை ஆல்டிடியூட் பிளாட்ஃபார்ம் சிஸ்டம் (HAPS) என்ற அதிநவீன ஏர்ஷிப்பை வெற்றிகரமாக சோதித்துள்ளது. ஆக்ராவில் உள்ள ADRDE மையத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த இலகுரக ஏர்ஷிப், கடல் மட்டத்திலிருந்து 21 கிலோமீட்டர் உயரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
சிறப்பு அம்சங்கள்
HAPS ஏர்ஷிப்பின் சிறப்பு அம்சங்கள் மற்றும் சோதனை
அக்டோபர் 6 அன்று நடைபெற்ற இச்சோதனையின் போது, 21 கிமீ உயரத்தை அடைந்த இந்த ஏர்ஷிப், 20 கிமீ உயரத்தில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாகத் தனது கண்காணிப்புக் கருவிகளுடன் நிலையாக நின்று செயல்பட்டது.
பின்னர் கட்டுப்பாட்டு மையத்தின் உத்தரவின் பேரில் பாதுகாப்பாகத் தரைக்குக் கொண்டு வரப்பட்டு மீட்கப்பட்டது.
வழக்கமான விமானப் போக்குவரத்து மற்றும் மேகக்கூட்டங்களுக்கு மேலே, ஆனால் செயற்கைக்கோள்களை விட பூமிக்கு மிக அருகில் இருந்து இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
முக்கியத்துவம்
இந்திய பாதுகாப்பிற்கு இது ஏன் மிக முக்கியமானது?
செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி இடைவிடாமல் நகர்ந்து கொண்டே இருக்கும்.
ஆனால், இந்த HAPS ஏர்ஷிப் ஒரு குறிப்பிட்ட எல்லைப் பகுதியின் மேலே ஒரே இடத்தில் நிலையாக நின்று 24 மணி நேரமும் கண்காணிக்கக் கூடியது.
குறிப்பாக, இமயமலை போன்ற கடினமான மலைப்பாங்கான எல்லைப் பகுதிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும், தொலைதூரப் பகுதிகளுக்குத் தடையற்ற தகவல் தொடர்பை வழங்கவும், பேரிடர் காலங்களில் நெட்வொர்க் சேவைகளை மீட்டெடுக்கவும் இது பெரிதும் உதவும்.
போலி செயற்கைக்கோள்
செயற்கைக்கோள்களுக்கு மாற்றாக உருவெடுக்கும் போலி செயற்கைக்கோள்
செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு பெரும்தொகை செலவாகும் நிலையில், இந்த ஏர்ஷிப்களைத் தரைக்குக் கொண்டு வந்து பராமரித்து மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும்.
இதனால் இயக்கச் செலவு மிகக் குறைவாகும்.
வழக்கமான பாராசூட்களைத் தயாரிக்கும் ADRDE மையத்திற்கு, விண்வெளியின் எல்லை வரை சென்று இயங்கும் இதுபோன்ற அதிநவீன போலியான செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பது விண்வெளிப் பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகும்.