எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி
அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்வருமான டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரனின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக'வின் தற்போதைய பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட பல அரசியல் சார்ந்தோர் இன்று அஞ்சலி செலுத்தவுள்ளனர். இதனால் அவரது நினைவிடத்தில் இன்று வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, காலை 10 மணியளவில் பழனிச்சாமியுடன் அவரது ஆதரவாளர்களும், 11 மணிக்கு ஓபிஎஸ் அவர்களும், 12 மணிக்கு சசிகலா தரப்பினரும், 12.30 மணியளவில் டிடிவி தினகரன் தரப்பினரும் அஞ்சலி செலுத்தவுள்ளதாக தெரிகிறது.
மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.
இவர்களுக்குள் மோதல் ஏற்படுவதை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அறிஞர் அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே, அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனியாக கட்சி துவங்கி, மக்கள் மனதில் இடம்பிடித்து, தமிழக முதல்வராக பதவியேற்று, பல மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தினார். 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்த இவர் இன்றும் மக்கள் மனதில் பெரும் அரசியல் தலைவர்களுள் ஒருவராக வாழ்ந்து வருகிறார்.