பாஜக தலைவர் அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்குப்பதிவு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் சொத்து பட்டியலை கடந்த மாதம் 14ம்தேதி பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தவறான புள்ளிவிவரங்களுடன் சொத்து பட்டியலினை வெளியிட்டுள்ளார் என்று முதல்வர் உள்ளிட்டோர் தரப்பில் பாஜக அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக மன்னிப்பு கேட்கவேண்டும், 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதேபோல் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் இதற்கு பதில் அனுப்பிய அண்ணாமலை, மன்னிப்பு, இழப்பீடு என்னும் பேச்சுக்கே இடமில்லை. நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் உள்ளன. எந்த நடவடிக்கையானாலும் சட்டப்படி சந்திக்க தயார் என்று கூறியிருந்தார்.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு
இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவர்கள் அண்ணாமலை மீது 2 தினங்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கினை தொடுத்துள்ளார். சென்னை மாநகர முதன்மை குற்றவியல் அரசு வழக்கறிஞரான தேவராஜன் தமிழக அரசின் சார்பில் ஆஜராகி இந்த வழக்கினை சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல்செய்தார். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையினை 2 மாதத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வரை தொடர்ந்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தற்போது அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். நோட்டீஸ் அனுப்பியும் அண்ணாமலை மன்னிப்பு கேட்காதக்காரணத்தினாலும், ஆதாரமின்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாகவும் அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் அவதூறு வழக்கினை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.