தூர்தர்ஷனின் லோகோ காவி நிறமாக மாறியதால் சர்ச்சை
இந்தியா: பொது ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன், அதன் லோகோவின் நிறத்தை சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது. தூர்தர்ஷனின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளன. தூர்தர்ஷனின் ஆங்கிலச் செய்திச் சேனலான DD நியூஸ், சமீபத்தில் ட்விட்டரில் ஒரு புதிய விளம்பர வீடியோவைப் பகிரும் போது தனது புதிய லோகோவை வெளியிட்டது. "எங்கள் கொள்கைகள் அப்படியே இருக்கிறது. ஆனால், தூர்தர்ஷன் இப்போது புதிய அவதாரத்தில் கிடைக்கிறது. முன்னெப்போதும் இல்லாத செய்தி பயணத்திற்கு தயாராகுங்கள்... புதிய DD செய்திகளை அனுபவியுங்கள்" என்று ட்விட்டரில் DD நியூஸ் கூறி இருந்தது.
தூர்தர்ஷனின் புதிய லோகோ
"இது பிரசார் பாரதி அல்ல - இது பிரச்சார பாரதி"
இந்நிலையில், தூர்தர்ஷனின் முன்னாள் தலைவரும் திரிணாமுல் எம்பியுமான ஜவார் சிர்கார், இது "பொருத்தமற்ற" நடவடிக்கை என்று இதை சாடியுள்ளார். "தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க லோகோவை காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது! அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி என்ற முறையில், நான் அதன் காவி நிறத்தை எச்சரிக்கையோடும் உணர்வோடும் பார்த்து வருகிறேன் - இது பிரசார் பாரதி அல்ல - இது பிரச்சார பாரதி" என்று அவர் ஒரு ஆன்லைன் இடுகையில் கூறியுள்ளார். தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவை மேற்பார்வையிடும் சட்டப்பூர்வ அமைப்பான பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2012 முதல் 2016 வரை சர்கார் பணியாற்றியுள்ளார்.