500 ரூபாய் நோட்டையும் திரும்பப் பெறும் திட்டத்தைக் கொண்டிருக்கிறதா மத்திய அரசு?
இந்தியாவில் கடந்த மே மாதம், மக்களி புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது ரிசர்வ் வங்கி. 2000 ரூபாய் நோட்டை வைத்திருப்பவர்கள் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அதனை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுக்கு அடுத்தபடியாக இருக்கும் 500 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் திட்டம் ஏதேனும் இருக்கிறதா என 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுத்து வடிவில் கேள்வியெழுப்பியிருக்கின்றனர். இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சகத்தின் துணை அமைச்சராக செயல்பட்டு வரும் பங்கஜ் சௌத்ரி, இதற்கும் மேல் வேறு ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழப்பு செய்யும் அல்லது திருப்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை, எனத் தெரிவித்திருக்கிறார்.
1000 ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் புழக்கத்திற்கு வருமா?
மேலும், 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் கால அவகாசமும் நீட்டிக்கப்படமாட்டாது எனவும் நாடளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார். 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, பெருகும் பணத் தேவையை சமாளிக்க 1000 ரூபாய் நோட்டுக்களை மீண்டும் புழக்கத்திற்குக் கொண்டு வரும் திட்டம் இருக்கிறதா என்றும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த பங்கஜ் சௌத்ரி, 2000 ரூபாய் நோட்டுகளால் ஏற்படும் பணத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க தேவையான நடவடிக்கைள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மேலும், தேவையான அளவு பிற ரூபாய் நோட்டுகள் அனைத்து வங்கிகளுக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.