பிறந்து 4 நாட்களே ஆன சிசுவின் உடல் உறுப்புகள் தானம்
குஜராத் மாநிலம் சூரத் மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மூளைச்சாவு அடைந்த காரணத்தினால் அதன் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை கடந்த அக்டோபர் 13ம் தேதி தான் பிறந்துள்ளது. இந்த குழந்தையின் தந்தை ஓர் வைர கைவினைஞர் என்று கூறப்படுகிறது. பிறந்ததில் இருந்தே இந்த குழந்தை அழாமல், எந்தவொரு அசைவுமில்லாமல் இருந்துள்ளது. இதனால் உடனடியாக குழந்தைகள் சிறப்பு மருத்துவமனைக்கு இக்குழந்தை மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டது என்று கூறப்படுகிறது. அங்கு இந்த அழகான ஆண் குழந்தைக்கு வெண்டிலேட்டர் கொண்டு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிகிச்சைகள் பலனளிக்காமல் இக்குழந்தை மூளைச்சாவு அடைந்துவிட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட அக்குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத்துள்ளனர்.
பல குழந்தைகள் மறுவாழ்வு அளித்த பச்சிளம் குழந்தை
இதனிடையே, தங்கள் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படும் பட்சத்தில் பல குழந்தைகள் மறுவாழ்வு அளிக்கக்கூடும் என்று அறிந்த பெற்றோர்கள் குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது. அதனை தொடர்ந்து, அந்த பச்சிளம் குழந்தையின் மென்மையான சிறிய உடலில் இருந்து 2 சிறுநீரகங்கள், மண்ணீரல், கல்லீரல், 2 கருவிழிகள் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. இந்த சிறுநீரகங்கள் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 10 மாத குழந்தைக்கும், அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 8 மாத குழந்தைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிக சிறிய குழந்தையிடமிருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.