சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து அக்டோபர் 31-ல் தமிழகம் முழுவதும் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டி, வரும் அக்டோபர் 31-ஆம் தேதியன்று திமுக மகளிரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசி வந்த முதலமைச்சர் விஜய் தற்போது மவுனம் காப்பது ஏன் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
எக்ஸ் பதிவு
முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
இது தொடர்பாகத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், "சேலத்தில் பட்டப்பகலில் பொது இடத்திலேயே படுகொலை அரங்கேறியுள்ளது. மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்".
"செஞ்சியில் காணாமல் போன சிறுமியின் நிலை என்னவென்று தெரியாமல் மர்மமாகவே நீடிக்கிறது. வீடியோ கேம்கள் மற்றும் திகில் படங்களை மிஞ்சும் அளவிற்குத் தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் பெருகி வருகின்றன".
"தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்தது போல் எவ்வித அச்சமும் இன்றி குற்றங்களில் ஈடுபடுகின்றனர். தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது" என்று சாடியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு
மவுனம் கலைப்பாரா முதலமைச்சர்?
மேலும் தனது பதிவில் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ள மு.க.ஸ்டாலின், "சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போல முதலமைச்சர் ஏன் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்?"
"எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டம் ஒழுங்கு குறித்து வாய் கிழியப் பேசிய முதலமைச்சர் விஜய், இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு வாயே திறக்காமல் இருப்பது ஏன்?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தவறிய தவெக அரசைக் கண்டித்து, வருகிற 31-ஆம் தேதி திமுக மகளிரணி சார்பில் முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டம் மாநில அளவில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.