முதலமைச்சர் விஜய் பற்றி சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது
செய்தி முன்னோட்டம்
தமிழக முதலமைச்சர் விஜய்யை பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசியதுடன், மிரட்டல் விடுத்த புகாரில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக MLA மார்க்கண்டேயனை போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த சனிக்கிழமை கோவில்பட்டியில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எம்எல்ஏ மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் விஜய்யை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார். அவர் பேசுகையில், "இந்திய வரலாற்றிலேயே இவ்வளவு கேவலமான முதலமைச்சரை யாரும் பார்த்திருக்க முடியாது. சட்டசபையில் எங்களை கோமாளி என நினைக்கிறாரா? சட்டமன்றத்திற்குள் விஜய் வந்தால் அவரது எலும்பை உடைத்துவிட்டு தான் அனுப்புவோம்" என்று மிரட்டல் தொனியில் பேசியிருந்தார்.
கைது
தவெக புகார் மற்றும் விடியற்காலை கைது
முதலமைச்சர் விஜய்க்கு எதிராக மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இன்று அதிகாலையிலேயே எம்எல்ஏ மார்க்கண்டேயனின் வீட்டிற்குச் சென்று அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
இதையறிந்து திரண்ட திமுகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீசாரின் வாகனத்தை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு கடும் வாக்குவாதம் நிலவியது.
பின்னர் அவர்களை அப்புறப்படுத்திய போலீசார், எம்எல்ஏவை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
வழக்கு
4 அடுக்கு பாதுகாப்பு மற்றும் பாய்ந்த 3 சட்டப் பிரிவுகள்
தற்போது எஸ்பி அலுவலகத்தில் எம்எல்ஏ மார்க்கண்டேயனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க எஸ்பி அலுவலகத்தைச் சுற்றி 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்தியாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படாமல் 100 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தடுப்புகள் அமைத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) கீழ் மூன்று கடுமையான பிரிவுகளில்- BNS 351(3): கடுமையான குற்ற மிரட்டல்; BNS 352: அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டு அவமதித்தல் ; BNS 353(2): சமூகங்களுக்கு இடையே பகைமையைத் தூண்டும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்புதல், ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.