Loading...
நிர்வாகிகளுக்குப் புதிய வயது வரம்பு, 110 மாவட்டங்கள்! திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானங்கள்
திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானங்கள்

நிர்வாகிகளுக்குப் புதிய வயது வரம்பு, 110 மாவட்டங்கள்! திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 22, 2026
01:54 pm

செய்தி முன்னோட்டம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) பவள விழாவைத் தொடர்ந்து, அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் இளம் தலைமுறையினருக்குப் வாய்ப்பளிக்கவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக மறுசீரமைப்புக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், 16 ஆவது கழக அமைப்புத் தேர்தலை முன்னிட்டு நிர்வாக மாற்றம், பதவிகளுக்கான வயது வரம்பு நிர்ணயம் மற்றும் உட்கட்சி மாவட்டங்களைப் பிரித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

புதிய விதிமுறைகள்

கிளை, வட்ட மற்றும் நகர்ப்புற நிர்வாகங்களுக்கான புதிய விதிமுறைகள்

கழகக் கட்டமைப்பின் ஆணிவேராகத் திகழும் கிளைக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் இரு முறை மட்டுமே அப்பொறுப்பில் நீடிக்க முடியும்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் புதிய கிளை அமைப்புகள் உருவாக்கப்படும்.

மேலும், வட்டக் கழக செயலாளர்களின் வயது வரம்பு 50 ஆகவும், பேரூராட்சி, பகுதி, நகரம் மற்றும் ஒன்றிய செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு, அவர்கள் இரு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எல்லை வரையறை

ஒன்றிய மறுசீரமைப்பு மற்றும் எல்லை வரையறைகள்

ஒன்றிய கழகங்கள் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களை உள்ளடக்கியதாக மாற்றியமைக்கப்படும்.

எந்தச் சூழலிலும் ஒரு ஊராட்சியை இரண்டாகப் பிரித்து வெவ்வேறு ஒன்றியங்களுடன் இணைக்கக் கூடாது என்றும், ஒரு கழக ஒன்றியம் ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் மட்டுமே அமைய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சியில் உருவாகும் வட்டக் கழகங்கள் சராசரியாக 10 ஆயிரம் வாக்காளர்களையும், பகுதி கழகங்கள் 40 ஆயிரம் வாக்காளர்களையும் கொண்டதாக மாற்றி அமைக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT

மாவட்டங்கள்

77ல் இருந்து 110 ஆக உயரும் திமுக மாவட்டங்கள்

கட்சியின் முக்கிய அங்கமாக விளங்கும் மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை நிர்வாக வசதிக்காக மறுசீரமைக்கப்படுகிறது.

தற்போதுள்ள 77 கழக மாவட்டங்கள் உயர்த்தப்பட்டு, இனி 110 கழக மாவட்டங்களாக செயல்படும்.

இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

மாவட்டக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகிக்க முடியும்.

110 மாவட்டங்களாகக் கட்டமைப்பு மாறுவதால் இனி மாநகர செயலாளர் பொறுப்பு தேவைப்படவில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புதிய அமைப்புகள்

15 நாட்களில் புதிய அமைப்புகளை உருவாக்க உத்தரவு

புதிதாக அமையவுள்ள 110 மாவட்டக் கழகங்களில் இடம்பெறும் தொகுதிகளைக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் முறைப்படி அறிவிப்பார்.

தலைவரின் அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள், அனைத்து மாவட்டங்களிலும் செயற்குழு கூட்டப்பட்டு, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழக அமைப்புகளை வழிகாட்டு நெறிமுறைகளின்படி உருவாக்க வேண்டும்.

பின்னர் தலைமைக் கழகப் பிரதிநிதியின் முன்னிலையில் இறுதிப் பட்டியலுக்கு ஒப்புதல் பெறப்பட்டுத் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என தலைமை செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT