தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட்: ஸ்டாலின் - சுதீஷ் சந்திப்பில் எட்டப்பட்ட அதிரடி உடன்பாடு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் 2026 சட்டப் பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. பிப்ரவரி 22 முதல் நடைபெற்று வரும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில், தேமுதிகவுக்கான இடங்கள் குறித்த இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், இன்று தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். இந்த ஆலோசனையின் முடிவில், திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்குவதற்கு சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சீட்
சட்டமன்றத் தேர்தல் இடங்கள்
இது குறித்து செய்தியாளர்களிடையே பேசிய சுதீஷ், சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்தும் உடன்பாடு எட்டப்பட்டதாகவும் தெரிவித்தார். எனினும் ராஜ்ய சபா உறுப்பினர் யார் என்பதையும், அவர் எப்போது நாமினேஷன் தாக்கல் செய்யப்படும் என்பது குறித்தும் நாளை காலை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவிப்பார் எனவும் அவர் தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதிகள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படவுள்ளது. தேமுதிக தரப்பில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகள் கேட்கப்பட்டாலும், திமுக சுமார் 6 முதல் 7 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.