திமுக - அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தை இன்று நேற்றல்ல.. 1979-ல் பிஜு பட்நாயக் போட்ட மாஸ்டர் பிளான்
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையே அவ்வப்போது இணைப்பு குறித்த செய்திகள் எழுவது இன்று நேற்றல்ல. 1970-களின் இறுதியிலேயே தேசியத் தலைவர்களின் தலையீட்டில் இதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது பலரும் அறியாத வரலாற்று உண்மையாகும். குறிப்பாக, ஒடிசாவின் முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் இதற்காக வகுத்த "மாஸ்டர் பிளான்" தமிழக அரசியல் திசையையே மாற்றியிருக்க வேண்டிய ஒன்று. நேற்று இரவு முதல் தவெக ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை குறைவாக இருப்பதனாலும், விஜய்க்கு எதிராக திமுக- அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக பரபரப்பை கிளப்பிய சூழ்நிலையில் இந்த பேச்சு அரசியல் வரலாற்றில் புதிதல்ல. வரலாறை அறிவோம் வாருங்கள்!
பிஜு பட்நாயக்
பிஜு பட்நாயக்கின் ரகசிய தூது
1979-ல் மத்தியில் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது, இந்திரா காந்தியின் எழுச்சியைத் தடுக்க திராவிடக் கட்சிகளை இணைக்க பிஜு பட்நாயக் விரும்பினார். கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் ஆகிய இருவரிடமும் தனித்தனியாகப் பேசி, மற்றவர் இணைப்பிற்கு விரும்புவதாகக் கூறி ஒரு ராஜதந்திர நகர்வை மேற்கொண்டார். கருணாநிதி தனது "நெஞ்சுக்கு நீதி" நூலில், பட்நாயக்கை "உயர்ந்த மனிதன்" என்று குறிப்பிட்டு, இந்த இணைப்பு முயற்சி குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
சந்திப்பு
எம்.ஜி.ஆர் - கருணாநிதி நேருக்கு நேர் சந்திப்பு
செப்டம்பர் 12, 1979 அன்று சென்னை வந்த பட்நாயக், கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு நிகழ்ந்தது. இதில், கட்சிக்கு திமுக என்ற பெயரையும், கொடிக்கு அதிமுக கொடியையும் பயன்படுத்துவது என உடன்பாடு எட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் முதல்வராகவும், கருணாநிதி கட்சியின் ஆயுட்காலத் தலைவராகவும் இருக்க முடிவு செய்யப்பட்டது.
தோல்வி
தோல்வியில் முடிந்த இணைப்பு முயற்சி
இரு கட்சிகளின் செயற்குழுவைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டது. ஆனால், அடுத்த நாள் வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர் இது குறித்துப் பேசாமல் அமைதி காக்க, அவரது அமைச்சர்கள் திமுகவை விமர்சித்தனர். இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் இந்த முயற்சி பாதியிலேயே கைவிடப்பட்டது. இக்கட்டான இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திய இந்திரா காந்தி, திமுகவுடன் கூட்டணி அமைத்து 1980 தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார். தமிழக அரசியலில் திராவிட இயக்கங்கள் ஒன்றிணைய எடுத்த இந்த முயற்சி தோல்வியில் முடிந்தாலும், இன்றும் தேர்தல் காலங்களில் பிஜு பட்நாயக்கின் பெயரும் இந்த இணைப்பு வரலாறும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. திராவிடக் கட்சிகளின் இணைப்பு என்பது நீண்டகால அரசியல் வரலாற்றைக் கொண்டது என்பதற்கு இதுவே சான்று.