நடிகர் விஜயகாந்த்க்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை
நடிகர் விஜயகாந்த்க்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வரும் விஜயகாந்த், 3 வார சிகிச்சைக்கு பின்னர் டிசம்பர் 11ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்று இருப்பதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுவருகிறது.
மருத்துவமனையை சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு
நடிகர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை சற்று நேரத்தில் அறிக்கை அளிக்க உள்ளது. மருத்துவமனை அறிக்கைக்கு பின்னரே, அவரின் உடல்நிலை குறித்த முழுமையான மற்றும் தெளிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட வியாதிகளால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, சில ஆண்டுகளுக்கு முன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை பகுதியில், 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வரலாம் என்பதால், பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.