மக்கள் வெள்ளத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வலம்
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல், தீவுத்திடலில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து அவரது நல்லடக்கம் செய்ய தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு பகுதியிலுள்ள தேமுதிக கட்சி அலுவலகத்திற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. கடல் போல் சாலை எங்கிலும் திரண்ட மக்கள் கண்ணீர் மல்க கேப்டன் விஜயகாந்துக்கு பிரியாவிடை கொடுத்தனர். அவரது கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள், பேனர்கள் உள்ளிட்டவை வழி நெடுக்கிலும் வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே, விஜயகாந்த் இறுதி சடங்குகள் நடக்கும் இடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் இறுதி நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
இந்நிலையில் தற்போது அவரது உடல் சந்தன பேழையில் வைத்து அடக்கம் செய்யப்படப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சந்தன பேழையில் 'புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்' என்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கேப்டன் விஜயகாந்துக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்படவுள்ளது. கேப்டனின் இறுதி மரியாதை செலுத்த அவரது அலுவலகத்திற்கு பிரபலங்கள் படையெடுத்தனர். ஒரு மனிதனின் மறைவிற்கு, அவரின் குடும்பத்தார்கள், உறவினர்கள், நண்பர்கள் கண்ணீர் வடிப்பது இயல்பு. ஆனால் ரமணா படத்தில் வரும், 'ஒரு மனுஷனுடைய பிரிவிற்கு நாடே அழுதால் அவன் ஒரு சிறந்த தலைவன்' என்னும் வசனத்தினை விஜயகாந்த் நிஜமாக்கியுள்ளார். இதற்கிடையே விஜயகாந்தின் இறுதி நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.