சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோயில். ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் இங்கு வந்து வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வைகாசி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷம் வரவிருப்பதையடுத்து சதுரகிரி மலைக்கு பக்தர்கள் சென்று சாமியினை தரிசிக்க வரும் ஜூன் 1ம்தேதி(நாளை)முதல் ஜூன் 4ம்தேதி வரை 4 நாட்களுக்கு வனத்துறை மற்றும் அந்த கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. குறிப்பிட்ட இந்த 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேற முடியும் என்று காலக்கெடுவும் வகுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிப்பு
சதுரகிரி மலையேறும் பக்தர்கள் இடையில் வரும் நீரோடை பகுதிகளில் இறங்கி குளிக்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. அதே போல் இரவில் பக்தர்கள் மலைமீது தங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச்செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல் அனுமதி வழங்கப்பட்ட இந்த 4 நாட்களில் பலத்த மழை அல்லது அங்குள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டால் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியானது ரத்து செய்யப்படும் என்றும் வனத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வரக்கூடும் என்பதால் அவர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.