மேகாலயாவில் பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு
அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்துள்ளது. அதன்படி தற்போது வரும் பிப்ரவரி 27ம் தேதி மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. இந்த தேர்தல் மூலம் மேகாலயா மாநிலத்தை கைப்பற்ற பா.ஜ.க. மிகுந்த தீவிரம் காட்டிவருகிறது. இதனையொட்டி வரும் 24ம் தேதி துரா பகுதியில் மோடியின் பிரசார பரப்புரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பி.ஏ.சங்மா என்னும் அரங்கில் நடைபெறவிருந்த இந்த பிரசார கூட்டத்திற்கு சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி அனுமதி மறுத்துள்ளது என்று கூறப்படுகிறது.
உட்கட்டமைப்பு பணிகள் நடந்து வருவதால் பிரசார கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு
இதனை தொடர்ந்து இந்த அனுமதி மறுப்பு குறித்து மாவட்ட நிர்வாகம், அந்த அரங்கில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அனுமதி அளிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. துரா பகுதியில் அமைந்துள்ள இந்த பி.ஏ. சங்மா விளையாட்டு மைதானம் இன்னும் முடிக்கப்படாமல், உட்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் பிரசார கூட்டத்திற்கு அனுமதி வழங்கமுடியாது என்று அரசாங்கத்திடம் இருந்து கட்சிக்கு கடிதம் வந்துள்ளதாக பா.ஜ.க. தேசிய செயலாளரும் வடகிழக்கு இணை பொறுப்பாளருமான ரிதுராஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். இச்சூழலில் வரும் 24ம் தேதி பிரதமர் மோடி மேகாலயா மக்களிடம் பேச முடிவு செய்துவிட்டால் அதனை யாராலும் தடுக்க முடியாது, மாற்று இடத்தில் பிரச்சாரம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.