கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு-200 பேர் கைது
கிருஷ்ணகிரியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல இடங்களில் எருதுவிடும் விழா விமர்சையாக நடந்து வருகிறது. இதில் குறிப்பிட்ட இலக்கை குறைந்த விநாடிகளில் கடக்கும் காளைக்கு ரொக்கபரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இதனையடுத்து இந்த விழாவிற்கு உரிய அனுமதி பெறவேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே ஓசூர் அருகே சின்னதிருப்பதி கோயில் திருவிழாவையொட்டி இன்று எருதுவிடும் விழா நடத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு உரிய அனுமதி பெறவில்லை. இந்நிலையில் அங்குள்ள காலியிடங்களை சீரமைத்து, 100க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன. இந்த காளைகளை பிடிக்க பல இளைஞர்கள் ஆவலாக இருந்தனர். இதனையடுத்து அங்குவந்த போலீசார் உரிய அனுமதி பெறாததால் இந்த போட்டியை நடத்த இயலாது என்று கூறி, அனைவரையும் கலைந்துபோக சொன்னதாக கூறப்படுகிறது.
கூட்டத்தை கலைக்க தடியடி நடத்திய போலீசார்-200க்கும் மேற்பட்டோர் கைது
போலீசார் கலைந்துபோக சொன்னதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் திடீரென கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் திரண்டு சாலையின் நடுவே கற்களை கொட்டி போக்குவரத்துக்கு இடையூறு செய்துள்ளனர். மேலும் அந்தவழி வந்த வாகனங்களை மறித்து அதன்மேல் ஏறி நின்று மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனால் அம்மாவட்ட ஆட்சியர் விழாவிற்கு அனுமதி வழங்கியுள்ளார். எனினும் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் எருதுவிடும் விழாவிற்கு அனுமதிக்கவேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போது சிலர் போலீசார்மீது கல் எரிந்ததில், அவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு உயரதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுசெய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.