தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு மற்றும் உண்ணிக் காய்ச்சல்: மாஸ்க் அணிய பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக உண்ணிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 301 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,649 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. அதேவேளையில், சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உண்ணிகள் கடிப்பதால் ஏற்படும் உண்ணிக் காய்ச்சல் பரவலும் அதிகரித்து வருகிறது.
அறிவுறுத்தல்
மாஸ்க் அணிய பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகப் பொது சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று தண்ணீர் தேங்கும் இடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
நோய் பரவலைத் தடுக்க, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மற்றும் குழந்தைகள் மாஸ்க் அணிவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுளது.
மேலும், காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பக் கூடாது எனப் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.