LOADING...
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: ஜெய்ஷ்-இ-முகமது தொடர்பு குறித்து தீவிர விசாரணை; சிசிடிவி காட்சிகள் வெளியீடு
இந்த தாக்குதலில் 8 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: ஜெய்ஷ்-இ-முகமது தொடர்பு குறித்து தீவிர விசாரணை; சிசிடிவி காட்சிகள் வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 11, 2025
07:55 am

செய்தி முன்னோட்டம்

தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த திங்கட்கிழமை இரவு நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 8 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட Hyundai i20 ரக காரை ஓட்டிச் செல்லும் சந்தேக நபரின் சிசிடிவி புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த கார் விபத்துக்கு சற்று முன்னர், சுமார் இரவு 6:52 மணியளவில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. மேலும், வெடிவிபத்து நடப்பதற்கு முன் இந்த கார் சுனேரி மசூதி அருகே சுமார் மூன்று மணி நேரம் (மதியம் 3:19 முதல் மாலை 6:48 வரை) நிறுத்தப்பட்டிருந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விவரங்கள்

பல உரிமையாளர்களிடம் கைமாறிய கார்

குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட கார் பல கைகள் மாறியுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முகமது சல்மான் என்பவரிடம் இருந்து நதீம், பின்னர் ஃபரிதாபாத்தில் உள்ள கார் டீலர், அதைத்தொடர்ந்து புல்வாமாவை சேர்ந்த தாரிக் (சமீபத்தில் கைது செய்யப்பட்டார்), கடைசியாக உமர் முகமது என நீண்ட சங்கிலி தொடரில் கார் கைமாறியுள்ளது. இந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது(JeM) பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் தேசியப் புலனாய்வு முகமைகள் தீவிரமாக விசாரிக்கின்றன. பஹல்காம் தாக்குதல் (ஏப்ரல்) மற்றும் Op மகாதேவ்(ஜூலை) ஆகியவற்றுக்கு பிறகு, சுமார் மூன்று மாத இடைவெளியில் இந்த செங்கோட்டை தாக்குதல் நடந்துள்ளதால், JeM அமைப்பின் வழக்கமான "மூன்று மாத செயல்பாட்டு சுழற்சி" இதில் பின்பற்றப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

தாக்குதல்

தற்கொலைத் தாக்குதலா?

அதிக அளவு IED வெடிபொருள் தயாரிப்பு பொருட்களை வைத்திருந்த மருத்துவர் முசாமில் ஷகீல் கைது செய்யப்பட்டதன் விளைவாக உமர் முகமது அதிர்ச்சியடைந்து இந்தத் தாக்குதலை ஒரு தற்கொலைத் தாக்குதலாக நடத்தியிருக்கலாம் என்று India Today செய்தி தெரிவிக்கின்றன. சம்பவ இடத்தில் குண்டுவெடிப்பால் பள்ளம் எதுவும் உருவாகவில்லை, கூர்மையான உலோகத் துண்டுகளும் கண்டெடுக்கப்படவில்லை என்பதால், இது திட்டமிட்ட, கட்டுப்படுத்தப்பட்ட வெடிவிபத்தாக இருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். அனைத்து சாத்தியமான கோணங்களிலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெல்லியில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் நகர எல்லைப் புள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.