டெல்லி மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது: கோப்பில் கையெழுத்திடாததால் சர்ச்சை
செய்தி முன்னோட்டம்
தேசிய தலைநகர் டெல்லியில் கிட்டத்தட்ட 46 லட்சம் பேருக்கு கிடைக்கும் மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது.
இதனால், ஆம் ஆத்மி அரசாங்கம் மற்றும் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு இடையில் மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது.
துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, வரும் ஆண்டிற்கான மானியத்தை இன்னும் நீட்டிக்காததால், இன்று முதல் மானியங்கள் நிறுத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார்.
"46 லட்சம் பேருக்கு நாங்கள் வழங்கும் மானியம் இன்று முதல் நிறுத்தப்படும். திங்கள்கிழமை முதல் மக்களுக்கு மானியம் இல்லாமல் உயர்த்தப்பட்ட பில்கள் கிடைக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.
டெல்லி அரசு மாதத்திற்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குகிறது. 201 முதல் 400 யூனிட்களை பயன்படுத்துபவர்களுக்கு 50% மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
details
தேவையற்ற அரசியலைத் தவிர்த்துவிடுங்கள்: சக்சேனாவின் அலுவலகம்
டெல்லி மின்துறை அமைச்சர் அதிஷி செய்தியாளர் சந்திப்பில் இதை கூறி இருக்கிறார்.
வரும் ஆண்டிற்கான மானியத்தை நீட்டிப்பதற்கு ஆம் ஆத்மி அரசாங்கம் ஒப்புதல் அளித்த போதிலும், மானியதற்கான கோப்பில் சக்சேனா இன்னும் கையெழுத்திடவில்லை என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆதாரமற்றது என்று சக்சேனாவின் அலுவலகம் மறுத்துள்ளது.
"தேவையற்ற அரசியலைத் தவிர்த்துவிடுங்கள். ஏப்ரல் 15 ஆம் தேதி கடைசித் தேதியாக இருக்கும் நிலையில், ஏப்ரல் 4 ஆம் தேதி வரை ஏன் இந்த முடிவை நிலுவையில் வைத்திருந்தீர்கள். ஏன் கோப்பை அனுப்பிவிட ஏப்ரல் 11ஆம் தேதி வரை ஆனது." என்று சக்சேனாவின் அலுவலகம் கூறியுள்ளது.