LOADING...
குடியரசு தின பாதுகாப்பு: குற்றவாளிகளைக் கண்டறிய AI கண்ணாடிகளை பயன்படுத்தும் டெல்லி காவல்துறை
குடியரசு தின விழாவை முன்னிட்டு அதிநவீன தொழில்நுட்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

குடியரசு தின பாதுகாப்பு: குற்றவாளிகளைக் கண்டறிய AI கண்ணாடிகளை பயன்படுத்தும் டெல்லி காவல்துறை

எழுதியவர் Venkatalakshmi V
Jan 22, 2026
11:50 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, நாட்டின் தலைநகரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிநவீன தொழில்நுட்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக டெல்லி காவல்துறை அதிகாரிகள், குற்றவாளிகளை உடனுக்குடன் கண்டறியும் 'ஏஐ (AI) திறன்பெற்ற ஸ்மார்ட் கண்ணாடிகளை' அணிந்து கர்த்தவ்யா பாதையில் ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளனர். 'அஸ்னாலென்ஸ்' (AznaLens) என்ற இந்தியத் தொழில் நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த நவீனக் கண்ணாடிகள், முக அங்கீகார மென்பொருள் (Facial Recognition System - FRS) மற்றும் வெப்ப இமேஜிங் (Thermal Imaging) வசதியைக் கொண்டுள்ளன.

சிறப்பம்சங்கள்

தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள்

இந்த கண்ணாடியை அணிந்துள்ள அதிகாரி கூட்டத்தைப் பார்க்கும்போது, அது மக்களின் முகங்களைத் தானாகவே ஸ்கேன் செய்யும். ஸ்கேன் செய்யப்பட்ட முகங்கள் காவல்துறையிடம் உள்ள குற்றவாளிகளின் புகைப்பட தரவுகளுடன் ஒப்பிடப்படும். 60 சதவீதத்திற்கும் மேலாக ஒரு முக ஒற்றுமை இருந்தால், அந்த நபரைச் சந்தேகத்திற்குரியவர் என்று இந்தக் கண்ணாடி உடனடியாக அடையாளம் காட்டும். ஒரு நபரின் 1990-ஆம் ஆண்டு புகைப்படம் மட்டுமே காவல்துறையிடம் இருந்தாலும், ஏஐ தொழில்நுட்பம் மூலம் அந்த நபர் தற்போது 35 ஆண்டுகள் கழித்து எப்படி இருப்பார் என்பதை துல்லியமாகக் கணக்கிட்டு அடையாளம் காணும் திறன் கொண்டது இந்தக் கருவி.

பாதுகாப்பு

நடமாடும் சிசிடிவி

வழக்கமாக ஒரு வேனில் அமர்ந்து கொண்டு சிசிடிவி திரைகளை கண்காணிக்கும் முறைக்கு மாற்றாக, இந்தத் தொழில்நுட்பம் மூலம் காவலர்கள் கூட்டத்தின் உள்ளே நடமாடிக்கொண்டே தனது ஸ்மார்ட்போன் திரை வழியாக தகவல்களைப் பெற முடியும். இந்த ஹெட்செட்கள் மினி சிசிடிவி கேமராக்கள் போல செயல்படுகின்றன. இந்த சாதனங்கள் கருப்பு நிறத்தில் உள்ளன, மேலும் கீழும் புரட்டக்கூடிய நகரக்கூடிய லென்ஸ்கள் உள்ளன. முதற்கட்டமாக ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கண்ணாடிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதனுடன் ட்ரோன் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தின அணிவகுப்பைக் காண வரும் லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சமூக விரோதிகள் ஊடுருவலைத் தடுக்கவும் இந்த 'ஏஐ' கண்ணாடிகள் பெரும் உதவியாக இருக்கும் என டெல்லி காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement