பாகிஸ்தான் ISI அமைப்பிற்கு SIM கார்டுகள் அனுப்பிய டெல்லி தம்பதி கைது
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ (ISI) உளவு அமைப்பின் ஆதரவுடன் இந்தியாவில் உளவு வேலையில் ஈடுபட்டு வந்த டெல்லியை சேர்ந்த இளம் தம்பதியை டெல்லி காவல்துறையின் சிறப்புப் படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட சாகில் (25) மற்றும் அவரது மனைவி சமீரா (21) ஆகிய இருவரும் 2024-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுடன் (PIOs) தொடர்பில் இருந்து, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை வழங்கி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
SIM கார்டுகள்
துபாய் வழியாக பாகிஸ்தானிற்கு சென்ற SIM கார்டுகள்
போலீசாரின் கூற்றுப்படி, இந்த தம்பதி 2024 முதல் 2025 வரை 8 இந்திய மொபைல் SIM கார்டுகளை பெற்று, துபாய் வழியாக பாகிஸ்தானிற்கு அனுப்பியுள்ளனர்.
இதற்காக அவர்களுக்கு பாகிஸ்தான் உளவு ஏஜென்ட்கள் மூலம் ₹30,000 பணம் கிடைத்துள்ளது.
அந்த இந்திய எண்களை கொண்டு பாகிஸ்தானிலிருந்து வாட்ஸ்அப் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்திய வாட்ஸ்அப் எண்கள் என்பதால், இராணுவம் மற்றும் முக்கிய அமைப்புகளின் வாட்ஸ்அப் குழுக்களில் நுழைந்து ரகசிய தகவல்களை சேகரிக்க பாகிஸ்தான் ஏஜென்ட்கள் இந்த வசதியை பயன்படுத்தியுள்ளனர்.
உளவு
இராணுவ பகுதிகளை நோட்டமிட்ட சாகில்
டெல்லி சரை காலே கான் பகுதியை சேர்ந்த சாகில், இந்தியாவில் உள்ள பல்வேறு இராணுவ கண்டோன்மென்ட் பகுதிகளை நோட்டமிடுவதற்கும், உளவு வேலைக்காக புதிய நபர்களை சேர்ப்பதற்கும் பணிக்கப்பட்டிருந்தார்.
கூடுதலாக, இராணுவத் தீர்ப்பாயங்களில் 'கோர்ட் மார்ஷியல்' நடவடிக்கைகளை சந்தித்து வரும் இராணுவ வீரர்களை பற்றிய தகவல்களையும் சாகில் திரட்டிப் பாகிஸ்தான் ஏஜென்ட்களுக்கு வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு
இன்ஸ்டாகிராமில் தொடங்கிய தொடர்பு
2024-ஆம் ஆண்டில் சமீரா மூலமாகவே சாகிலுக்கு இன்ஸ்டாகிராமில் பாகிஸ்தான் ஏஜென்ட் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அதன் பின்னர் அவர்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். அந்த பாகிஸ்தான் ஏஜென்ட், இந்தத் தம்பதியை ஐ.எஸ்.ஐ அதிகாரியிடம் அறிமுகப்படுத்தி, அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி உளவு வேலையில் ஈடுபடுத்தியுள்ளார்.
டெல்லியில் ஸ்லீப்பர் செல் அமைப்புகளுக்கு உதவியாளர்கள் செயல்படுவது குறித்துக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், முதலில் சாகில் கைது செய்யப்பட்டார்.
அவரது மொபைல் போன் தடயவியல் சோதனையில் பாகிஸ்தான் அதிகாரிகளுடனான உரையாடல்கள் இருப்பது உறுதியானது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, நொய்டாவில் உள்ள ஒரு கால் சென்டரில் பணியாற்றி வந்த அவரது மனைவி சமீராவும் கைது செய்யப்பட்டார்.
இவர்களிடமிருந்து 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.