டெல்லி மெட்ரோவில் 'ஆபாசமாக' உடை அணிந்து சென்ற பெண் பேட்டி
டெல்லி மெட்ரோவில் "ஆபாசமாக" உடை அணிந்திருந்த பெண் என்று ஒரு பெண்ணின் வீடியோ சில நாட்காளாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதற்கு, பலரும் தங்கள் விமர்சனங்களையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள டெல்லி மெட்ரோ சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உடைகள் அணிவதை தவிர்க்குமாறு கேட்டுகொண்டது. மேலும், டெல்லி மெட்ரோ பராமரிப்பு மற்றும் இயக்க விதிகளின்படி, ஆபாசமான உடை அணிவது தண்டனைக்குரியது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆடை அணிவது எனது சுதந்திரம்: ரிதம் சனானா
இதற்கிடையில், டெல்லி மெட்ரோவில் "ஆபாசமாக" உடை அணிந்து சென்றவரின் பெயர் ரிதம் சனானா என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து ஒரு செய்தி சேனலுக்கு பேட்டியளித்த ரிதம் சனானா, "நான் குட்டையான ஆடைகள் அணிவது தவறு என்றால், என்னை வீடியோ எடுப்பவர்களின் நோக்கமும் தவறாக இருக்க வேண்டும். ஆடை அணிவது எனது சுதந்திரம் . நான் எந்த ஆடையை அணிய வேண்டும் என்பதில் எனக்கு சுதந்திரம் இருக்கிறது. நான் இதை விளம்பரத்திற்காக செய்யவில்லை." என்று கூறியுள்ளார். மேலும், "இது என்னுடைய வாழ்க்கை இதை எப்படி வாழவேண்டும் என்று நினைக்கிறேனோ அப்படி வாழ்வேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.