டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம்: டெல்லி முதல்வர் அறிவிப்பு
டெல்லியில் சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று(ஜூலை 13) தெரிவித்தார். யமுனை நதியின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதால், டெல்லியின் வசிராபாத், சந்திரவால் மற்றும் ஓக்லா நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. "வசிராபாத், சந்திரவால் மற்றும் ஓக்லா நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், டெல்லியில் சில இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படலாம்" என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று காலை யமுனா நதியின் நீர்மட்டம் 208.48 மீட்டராக உயர்ந்தது. இன்று பிற்பகல் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், டெல்லியில் தற்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஞாயிற்றுகிழமை வரை இயங்காது
நீர் மட்டத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மறுசீரமைப்பு பணிகள் இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், மக்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறும்(WFH), வெளியே செல்ல வேண்டாம் என்றும் கெஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார். இந்த கடும் வெள்ளத்தால், டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர்களின் குடியிருப்புகள் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஞாயிற்றுகிழமை வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் காரணமாக டெல்லியின் யமுனா பேங்க் மெட்ரோ நிலையம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இது தவிர, டெல்லி மெட்ரோ இயல்பாக இயங்கி வருகிறது. இதற்கான மாற்று வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி மெட்ரோ அறிவித்துள்ளது.