டெல்லி: நீதிமன்ற அனுமதியுடன் உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்தித்தார் மணீஷ் சிசோடியா
செய்தி முன்னோட்டம்
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது மனைவியைச் சந்திக்க டெல்லியில் உள்ள தனது வீட்டிற்கு இன்று சென்றார்.
இன்று காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை அவரது மனைவி சீமா சிசோடியாவை சந்திக்க டெல்லி நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து, டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா இன்று பாதுகாப்புடன் அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது மனைவி சீமாவைப் பார்க்க சிசோடியாவுக்கு ஜூன் மாதமும் டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
கோவெஜ்
மணீஷ் சிசோடியா கட்டுப்பாடுகளுடன் அனுமதி
இருப்பினும், அவரது மனைவியின் உடல்நிலை அப்போது மோசமடைந்ததால் திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனால், மணீஷ் சிசோடியாவால் அவரது மனைவியை அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை.
அது நடந்து சில நாட்களுக்குப் பிறகு சிசோடியா தனது மனைவியின் உடல்நிலையைக் காரணம் காட்டி இடைக்கால ஜாமீன் கோரினார். ஆனால் அது மறுக்கப்பட்டது.
நேற்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சிசோடியாவை அவரது மனைவியைச் சந்திக்க அனுமதித்தது.
ஆனால் இந்த சந்திப்பின் போது ஊடகங்களுடன் பேசவோ அல்லது அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்கவோ கூடாது என்று நீதிமன்றம் அவருக்கு அறிவுறுத்தியது.
இந்த கட்டுப்பாடுகளுடன் அவர் இன்று அவரது மனைவியை சந்திக்க சென்றுள்ளார்.