டெல்லி ஜந்தர் மந்தரில் தொடரும் பதற்றம்: கொட்டும் மழையில் செல்போன் வெளிச்சத்தில் போராடும் CJP
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) போராட்டம், 23-வது நாளாக நேற்று நள்ளிரவையும் தாண்டி விடிய விடியத் தீவிரமடைந்துள்ளது. நேற்று பகலில் டெல்லி போலீசார் நடத்திய தடியடி, கண்ணீர்புகைக் குண்டுவீச்சு மற்றும் இரவில் கொட்டித் தீர்த்த கனமழையையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் சிஜேபி தொண்டர்கள் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து முகாமிட்டு மத்திய அரசுக்கும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
மின்சாரம் துண்டிப்பு
மின்சாரம் துண்டிப்பு: பழிவாங்கும் நடவடிக்கை என குற்றச்சாட்டு
போராட்டம் நடக்கும் ஜந்தர் மந்தர் பகுதியில் வேண்டுமென்றே மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
மின்சாரம் இல்லாததால், போராட்டக்காரர்கள் தங்களது செல்போன் லைட்களை மட்டுமே வெளிச்சத்திற்குப் பயன்படுத்தி நகர்ந்து வருகின்றனர்.
காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி செய்ய பாண்டேஜ்கள், ஆண்டிசெப்டிக் லோஷன், பாராசிட்டமால் மாத்திரைகள் மற்றும் குடிநீர் விநியோகிக்க உடனடியாக உதவுமாறு எக்ஸ் தளத்தில் சிஜேபி கோரிக்கை விடுத்துள்ளது.
போலீசார் தங்களை கொடூரமாகத் தாக்கியதாகவும், போராட்டக் களத்தையே முற்றிலும் சேதப்படுத்திவிட்டதாகவும் சிஜேபி குற்றம் சாட்டியுள்ளது.
"கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்யும் வரையிலோ அல்லது அவர் முறைப்படி நீக்கப்படும் வரையிலோ இந்த இடத்தை விட்டு நாங்கள் நகர மாட்டோம். எங்கள் போராட்டம் தொடரும்!"என அக்கட்சி X தளத்தில் பதிவிட்டுள்ளது.
சோனம் வாங்சுக்
மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடரும் சோனம் வாங்சுக்
சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட அமைதிப் வழியிலான மாணவர்கள் மீது டெல்லி போலீசார் நடத்திய வன்முறைத் தாக்குதலே இதற்கு முக்கியக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க அனுமதிக்கும் வரையிலோ அல்லது மருத்துவமனையில் இருந்தபடியே தன்னை எம்பிக்களைச் சந்திக்க அனுமதிக்கும் வரையிலோ தனது உண்ணாவிரதம் தொடரும் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆதரவு
எம்பிக்கள் சந்திப்பு, எதிர்க்கட்சிகள் ஆதரவு
ஜூலை 20-ல் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, நீட் முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கடும் அமளி காரணமாக அவைகள் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜரிவால் உள்ளிட்ட பல முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், மாணவர்களின் மீதான காவல்துறை வன்முறையைக் கடுமையாகக் கண்டித்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
நள்ளிரவில் கேரளா பவன் முன்பாகவும், ஜந்தர் மந்தரிலும் திரண்ட சிஜேபி நிறுவனத் தலைவர் அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா மற்றும் கீதாஞ்சலி ஆங்மோ ஆகியோர் டெல்லி வாழ் மக்களைத் தங்களது அறப்போராட்டத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.