LOADING...
டெல்லி ஐஆர்எஸ் அதிகாரி மகள் கொலை: கொலையாளி 4 அடுக்கு பாதுகாப்பை உடைத்தது எப்படி?
22 வயது பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

டெல்லி ஐஆர்எஸ் அதிகாரி மகள் கொலை: கொலையாளி 4 அடுக்கு பாதுகாப்பை உடைத்தது எப்படி?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 23, 2026
09:43 am

செய்தி முன்னோட்டம்

தெற்கு டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள ஐஆர்எஸ் (IRS) அதிகாரியின் 22 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நான்கு அடுக்கு பாதுகாப்பு கொண்ட அந்த வீட்டிற்குள், முன்னாள் வேலையாள் ராகுல் மீனா எவ்வாறு நுழைந்து இந்தச் செயலைச் செய்தார் என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பலத்த பாதுகாப்பு நிறைந்த வீட்டிற்குள், பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் நுழைந்து இந்த கொடூரத்தை அரங்கேற்றிய சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.

பாதுகாப்பு

நான்கு அடுக்கு பாதுகாப்பைத் தகர்த்தது எப்படி?

கைலாஷ் ஹில்ஸ் பகுதியில் உள்ள அந்த அதிகாரி வீட்டில் டிஜிட்டல் பூட்டுகள், ஸ்மார்ட் கார்டு மூலம் இயங்கும் கதவுகள் என நவீனப் பாதுகாப்பு வசதிகள் இருந்தன. இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்லும்போது, தங்கள் மகள் தூக்கத்திலிருந்து எழத் தேவையில்லை என்பதற்காக, ஸ்மார்ட் கார்டு ஒன்றினை வீட்டின் வெளியே ஒரு ரகசிய இடத்தில் வைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். சுமார் 8 மாதங்கள் அங்கு வேலை செய்த ராகுல் மீனாவுக்கு இந்த ரகசியமும், வீட்டின் டிஜிட்டல் கடவுக்குறியீடுகளும் (Passcodes) நன்றாகத் தெரிந்திருந்தது. இதைப் பயன்படுத்தி எவ்விதத் தடையும் இன்றி அவன் உள்ளே நுழைந்துள்ளான்.

தொடர் குற்றவாளி

கொலைக்கு முன் ராஜஸ்தானில் கைவரிசை

புலனாய்வு விசாரணையில் 23 வயதான ராகுல் மீனா, டெல்லிக்கு வருவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பே ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் தனது நண்பரின் மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. செவ்வாய்க்கிழமை இரவு அல்வாரில் இக்குற்றத்தை செய்த பின்னர், ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் பயணித்து புதன்கிழமை அதிகாலை 6.30 மணியளவில் டெல்லி வந்துள்ளான். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான இவனுக்குப் பணத் தேவை இருந்ததாலும், வேலையிலிருந்து நீக்கப்பட்டதால் குடும்பத்தின் மீது இருந்த ஆத்திரமுமே இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

Advertisement

ஆதாரம்

சிசிடிவி ஆதாரங்களும் திட்டமிட்ட கொலையும்

புதன்கிழமை காலை 6.28 மணிக்கு மஞ்சள் நிறச் சட்டையுடன் வீட்டிற்குள் நுழையும் ராகுல் மீனா, சரியாக 7.22 மணிக்கு வேறு உடை அணிந்து வெளியேறுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சுமார் 40 நிமிடங்களுக்குள் அந்தப் பெண்ணை செல்போன் சார்ஜர் வயரால் நெரித்துக் கொன்றுவிட்டு, வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்துடன் தப்பியுள்ளான். டெல்லி போலீஸார் 15 குழுக்களை அமைத்துத் தேடிய நிலையில், துவாரகாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்த ராகுல் மீனாவை கைது செய்தனர். ராகுல் மீனா பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கடன் வாங்கியது மற்றும் பண மோசடிகளில் ஈடுபட்டது காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளான். இந்த அவமானத்திற்குப் பழிவாங்கவும், சூதாட்டக் கடனை அடைக்கத் திருடவும் அவன் இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்ததாக போலீஸார் கருதுகின்றனர்.

Advertisement