டெல்லி மருத்துவமனை தீ விபத்து: குழந்தை பராமரிப்பு மைய உரிமையாளர் கைது
7 பிறந்த குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான பேபி கேர் நியூ பர்ன் குழந்தைகள் மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் நவின் கிச்சியை மே 30 வரை போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. கடந்த சனிக்கிழமை பிற்பகுதியில் அந்த மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் பணியில் இருந்த, மற்றொரு குற்றவாளியான டாக்டர் ஆகாஷும், போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார். கிச்சி மற்றும் ஆகாஷ் ஆகிய இருவரையும் டெல்லி போலீஸார் நேற்று கைது செய்தனர். சம்பவம் நடந்த போது அந்த மருத்துவமனையில் 12 குழந்தைகள் இருந்தன என்று டெல்லி கோட்ட ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
ஷார்ட் சர்க்யூட் பிரச்சனையால் தீ விபத்து ஏற்பட்டதா?
உயிரிழந்த குழந்தைகளில் நான்கு ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் இருந்தன. 25 நாட்கள் வயதுடைய ஒரு ஆண் குழந்தையை தவிர மற்ற அனைத்து குழந்தைகளும் பிறந்து 15 நாட்களே ஆகின்றன. முதற்கட்ட விசாரணையின் படி, ஷார்ட் சர்க்யூட் பிரச்சனையால் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று துணை போலீஸ் கமிஷனர் (ஷாஹ்தரா) சுரேந்திர சவுத்ரி கூறியுள்ளார். இந்த தீ விபத்து குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு டெல்லி அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. பிரதேச ஆணையர் அஸ்வனி குமாரும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஷாதாரா மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டார்.