டெல்லி விமான நிலையம் சாதனை: இந்தியா மற்றும் தெற்காசியாவின் மிகச்சிறந்த ஏர்போர்ட்! உலகத் தரவரிசையில் முன்னேற்றம்
செய்தி முன்னோட்டம்
லண்டனில் நடைபெற்ற பாசஞ்சர் டெர்மினல் எக்ஸ்போ நிகழ்வில், 2026ஆம் ஆண்டிற்கான உலக விமான நிலைய விருதுகளை ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் அறிவித்தது. இதில் டெல்லி சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து 8வது ஆண்டாக (2019 முதல்) இந்தியா மற்றும் தெற்காசியாவின் மிகச்சிறந்த விமான நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையம் கடந்த 2025 ஆம் ஆண்டு 32வது இடத்தில் இருந்தது. தற்போது 4 இடங்கள் முன்னேறி உலக அளவில் 28வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த முதல் 30 விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய விமான நிலையம் என்ற பெருமையை இது தக்கவைத்துக் கொண்டுள்ளது.
சாதனைகள்
முக்கியச் சாதனைகள்
ஆண்டுக்கு 70 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைக் கையாளும் விமான நிலையங்களின் பிரிவில், கடந்த ஆண்டு 8வது இடத்தில் இருந்த டெல்லி, தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியா மற்றும் தெற்காசியாவில் சிறந்த பணியாளர்களைக் கொண்ட விமான நிலையங்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. பயணிகளின் இடைநில்லா பயண வசதிகளுக்காக உலக அளவில் 7வது சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது.
காரணங்கள்
வெற்றிக்கான காரணங்கள்
ஜிஎம்ஆர் குழுமத்தால் நிர்வகிக்கப்படும் இந்த விமான நிலையம், பயணிகளின் வசதிக்காக டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், விரிவுபடுத்தப்பட்ட முனையங்கள் மற்றும் அதிநவீன உள்கட்டமைப்புகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகளிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையிலேயே இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விதே குமார் ஜெய்பூரியார் கூறுகையில், "இந்த அங்கீகாரம் எங்களது சேவையின் தரத்தை மேலும் உயர்த்த ஊக்கமளிக்கிறது. இந்தப் பெருமை எங்களது பயணிகள், ஊழியர்கள் மற்றும் கூட்டாளிகளையே சாரும்." என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.