டெல்லி கோர விபத்து - பாலியல் பலாத்காரம் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என உடல் கூறாய்வு முடிவு வெளியாகியுள்ளது
டெல்லியில் 20 வயது இளம்பெண் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது காரில் சிக்கி சில கி.மீ., தூரம் இழுத்துச்செல்லப்பட்டு பலியான சம்பவம் குறித்து பலத்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பலியான பெண் தனியாக பயணிக்கவில்லை அவருடன் ஒருவர் பயணம் செய்துள்ளார் என்னும் தகவல் நேற்று வெளியான நிலையில், அந்த பெண்ணிடம் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்துள்ளார்கள். அப்போது அவர், "அஞ்சலியும் நானும் ஸ்கூட்டரில் செல்லும்பொழுது எதிரில் வந்த கார் மோதி, நான் ஒரு பக்கமும் அவர் ஒரு பக்கமும் விழுந்தோம். அவர் மீது கார் ஏறிய பொழுது அவர் காரில் சிக்கி கொண்டார். காரில் இருந்தோர் இதனை கவனித்தும் வண்டியை நிறுத்தாமல், அஞ்சலியை இழுத்தவாறு வேகமாக சென்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
12 கி.மீ., இழுத்துச்செல்லப்பட்ட இளம்பெண்ணின் மூளை பகுதி காணவில்லை-உடல் கூறாய்வு அதிர்ச்சி தகவல்
விபத்து நடந்த அதிர்ச்சியில் தான் வீட்டிற்கு வந்துவிட்டதாகவும், பயம் காரணமாக யாருக்கும் தகவல் சொல்லவில்லை என்றும் அப்பெண் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, அஞ்சலி சிங் உடல் கூறாய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், அஞ்சலி காரில் கிட்டத்தட்ட 12 கி.மீ., தூரம் இழுத்து செல்லப்பட்டுள்ளதால் அவரது மூளை பகுதியை காணவில்லை, மண்டை ஓடு திறந்திருந்தது போன்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவரது தொடை, கால், முதுகெலும்பு போன்ற 40 இடங்களில் காயம் ஏற்பட்டிருந்ததோடு, பல காயங்கள் மண் மற்றும் கற்களால் மூடப்பட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார், பாலியல் பலாத்காரம் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் உடல் கூறாய்வில் தெரிவித்துள்ளார்கள்.