
அவதூறு வழக்கு: சிறிது நேரம் காவலில் வைக்கப்பட்டிருந்த பின் ஜாமீனில் வெளிவந்தார் ராகுல் காந்தி
செய்தி முன்னோட்டம்
பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா 2018 இல் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உத்தரபிரதேச உள்ளூர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு பரப்பும் வகையில் ராகுல் காந்தி பேசியதாக 2018ஆம் ஆண்டில் விஜய் மிஸ்ரா குற்றம் சாட்டி இருந்தார்.
ஜாமீன் வழங்கப்படுவதற்கு முன்பு, சுல்தான்பூர் நீதிமன்றம் ராகுல் காந்தியை 30-45 நிமிடங்களுக்கு காவலில் வைத்திருந்ததாக ராகுல் காந்தியின் வழக்கறிஞர் சந்தோஷ் பாண்டே கூறியுள்ளார்.
2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
காங்கிரஸ்
ராகுல் காந்திக்கு தொடர்ந்து வரும் சோதனைகள்
மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்குகள் சேகரிப்பதற்காக, 6,700 கிலோமீட்டர் தூரத்திற்கு நடை பயணமாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
அவரது இந்த யாத்திரைக்கு "பாரத் ஜோடோ நியாய யாத்ரா" என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி ராகுல் காந்தியின் எம்பி பதவி தற்காலிகமாக பறிக்கப்பட்டது.
அதனால், அவர் 2024ஆம் ஆண்டு பொது தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு உச்ச நீதிமன்றம் நிவாரணம் வழங்கியது.
அதனை தொடர்ந்து, அவரது எம்பி பதவியும் அவருக்கு திரும்ப கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.