கர்நாடகா டாண்டேலி ரிசார்ட்டில் பயங்கரம்: 40 அடி உயர ஜிப்லைனில் இருந்து விழுந்த வாலிபர்
செய்தி முன்னோட்டம்
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான டாண்டேலியில், தனியார் சொகுசு ரிசார்ட் ஒன்றில் ஜிப்லைன் சாகச விளையாட்டின் போது கயிறு/ லாக் உடைந்ததால் 24 வயது இளைஞர் ஒருவர் 30 முதல் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். ரிசார்ட் நிர்வாகத்தின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
விபத்து
நடுவானில் அறுந்த ஜிப்லைன்
கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த குபேரா சுரபுரா என்ற 24 வயது இளைஞர், தனது சகோதரருடன் டாண்டேலியில் உள்ள ஸ்டெர்லிங் ரிவர் ரிசார்ட் என்ற தனியார் ரிசார்ட்டிற்குச் சுற்றுலா சென்றுள்ளார்.
கடந்த ஜூலை 3ஆம் தேதி அங்குள்ள ஜிப்லைன் சாகச விளையாட்டில் குபேரா பங்கேற்றார்.
அவர் நடுவானில் ஜிப்லைனில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அதன் பாதுகாப்பு பூட்டு/ கயிறு திடீரென அறுந்தது.
இதனால் நிலைதடுமாறிய குபேரா, சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே இருந்த பாறைகள் நிறைந்த தரையில் நேராக விழுந்தார்.
இந்த பதைபதைக்க வைக்கும் காட்சி, கீழே இருந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்த அவரது சகோதரரின் மொபைல் போனில் பதிவாகியுள்ளது.
சிகிச்சை
பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது
இந்த கொடூரமான விபத்தில் குபேராவின் கை, கால்களில் பல இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன.
மேலும், நரம்புகளிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விபத்து நடந்தவுடன் டாண்டேலியில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் விஜயபுராவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
எனினும், நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், தற்போது மகாராஷ்டிராவில் உள்ள மிராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அங்கு அவருக்கு அடுத்தடுத்து பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
சர்ச்சை
வாக்குறுதியை மீறிய ரிசார்ட் என குடும்பத்தினர் குமுறல்
இந்த விபத்து தொடர்பாக குபேராவின் குடும்பத்தினருக்கும் ரிசார்ட் நிர்வாகத்திற்கும் இடையே கடும் சர்ச்சை வெடித்துள்ளது.
சாகச விளையாட்டுகளுக்கான முறையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பராமரிப்பு இல்லாததே இந்த விபத்துக்குக் காரணம். விபத்து நடந்த ஆரம்பத்தில், குபேராவின் மருத்துவச் செலவுகள் முழுவதையும் ஏற்பதாக ரிசார்ட் நிர்வாகம் உறுதியளித்தது, ஆனால் தற்போது கொடுத்த வாக்குறுதியை மீறி, மருத்துவச் செலவுகளை தர மறுப்பதோடு முறையான பதிலும் அளிக்காமல் ஏமாற்றி வருகிறது என குபேரவின் குடும்பத்தினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகளை ரிசார்ட் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது எதிர்பாராமல் நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான தொழில்நுட்பத் தவறு என்றும், விபத்து நடந்த நேரத்தில் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் சரியாகப் பின்பற்றப்பட்டன என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.