தற்கொலை செய்து கொண்ட தலித் IIT மாணவர் நண்பர்களால் அவமானப்படுத்தப்பட்டாரா
IIT பாம்பேயில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் 18 வயது தலித் மாணவர், தனது சாதியின் காரணமாக தனது நண்பர்களால் ஒதுக்கப்பட்டதைப் பற்றி அவரது சகோதரி மற்றும் அத்தையிடம் பேசியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். IIT பாம்பேயின் அதிகாரிகள் அப்படி எந்த பாரபட்சம் பார்க்கப்படவில்லை என்று கூறியுள்ள நிலையில், தர்ஷன் சோலங்கியின் குடும்பத்தினர் அவர் நண்பர்களால் துன்புறுத்தப்பட்டதாக கூறியுள்ளனர். "கடந்த மாதம் அவன் வீட்டுக்கு வந்தபோது, கல்லூரியில் சாதிப் பாகுபாடு பார்க்கப்படுவதாக என்னிடமும், அம்மா-அப்பாவிடமும் கூறினான். அவன் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் என்பதை தெரிந்துகொண்ட நண்பர்கள், அவனுடன் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்திவிட்டனர்." என்று அவரது சகோதரி ஜான்வி சோலங்கி கூறியுள்ளார்
தலித் மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமா?
"அவன் கஷ்டத்தில் இருந்திருக்கிறான். அவனை சித்திரவதை செய்திருக்கிறார்கள். அதனால்தான் அவன் இந்த முடிவை எடுத்திருக்கிறான்." என்று அவரது தாயார் தர்லிகாபென் சோலங்கி கூறி இருக்கிறார். இதற்கிடையில், இது நிறுவன கொலையுமல்ல இங்கு சாதியால் யாரும் துன்புறுத்தபடவும் இல்லை என்று IIT பாம்பே தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுதி கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து இறந்த தர்ஷனின் மரணத்தை விபத்து என்று போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்கொலை கடிதம் என்று எதுவும் கிடைக்காத நிலையில், தலித் மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று மாணவர் குழு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.