Page Loader
புயல் நிவாரணம்: தலைமை செயலகப்பணியாளர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தினை வழங்க முடிவு
மிக்ஜாம் புயல் - தலைமை செயலகப்பணியாளர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தினை வழங்க முடிவு

புயல் நிவாரணம்: தலைமை செயலகப்பணியாளர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தினை வழங்க முடிவு

எழுதியவர் Nivetha P
Dec 08, 2023
07:19 pm

செய்தி முன்னோட்டம்

மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது. மழை ஓய்ந்த நிலையில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்புயலின் பாதிப்பானது தமிழக வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றாகும் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. மேலும், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வெள்ளநீர் வடிய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த மிக்ஜாம் புயலால் சென்னை தலைமை செயலக பணியாளர்கள் பலர் பாதிப்படைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

நிவாரண நிதி 

மிக்ஜாம் புயல் மீட்பு பணிகளுக்கான நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது 

எனினும், வழக்கம் போல் இயற்கை பேரிடர் காலங்களில் இதுபோன்ற இக்கட்டான சூழலில் நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கியுள்ளனர். அதன்படி மிக்ஜாம் புயல் மீட்பு பணிகளுக்கான நிவாரண நிதிக்கு தங்கள் ஒருநாள் ஊதியத்தினை வழங்க முடிவு செய்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த பேரிடர் காலத்திலும் தலைமை செயலக பணியாளர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தினை நிவாரண நிதிக்கு வழங்கியிருந்தது நினைவுகூரத்தக்கது. இதற்கிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஒரு மாத சம்பளத்தினை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.