'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்
'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, வடக்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நேற்று இரவு 11:30 மணியளவில், கிழக்கு-மத்திய அரபிக்கடலில், மும்பைக்கு மேற்கு-தென்மேற்கு திசையில் 870 கிமீ தொலைவிலும், கோவாவிற்கு மேற்கு- தென்மேற்கு திசையில் 840 கிமீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. வளிமண்டல நிலைகள் மற்றும் மேகக் கூட்டங்கள் காரணமாக, வரும் ஜூன் 12 ஆம் தேதி வரை இந்த அதிதீவிர புயல் வலிமையைத் தக்கவைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சத்தீவு, கேரளா, கர்நாடகாவில் மழை இருக்கும்
தற்போது, இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து, குஜராத்தின் போர்பந்தருக்கு தென்மேற்கே 900 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மீனவர்கள் ஆழ்கடலில் இருந்து கரைக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். மேலும், தொலைதூர எச்சரிக்கை சமிக்ஞையை ஏற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புயலினால் தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று அகமதாபாத்தில் உள்ள வானிலை மைய இயக்குனர் மனோரமா மொஹந்தி தெரிவித்துள்ளார். மேலும், நேற்று கேரளாவில் பருவமழை தொடங்கியது. இதனால், லட்சத்தீவு, கேரளா, கர்நாடகாவில் இடி மின்னல் மற்றும் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.