காவிரி குடிநீர் குழாய் பாதிப்பு - 35 கிராமங்கள் குடிநீர் இன்றி தவிப்பு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த குண்டடத்தில் சாலை விரிவாக்கப் பணி காரணமாக காவிரி குடிநீர்க் குழாய் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், 35 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 9 மாதங்களாக குடிநீர் இன்றி தவித்து வருகிறார்கள். இதற்கு முன், அமராவதி குடிநீர் திட்டத்தின் மூலம் அந்த கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அத்தோடு, கிராமங்களில் ஊராட்சி நிர்வாகம் மூலம் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு அதிலிருந்து தண்ணீர் எடுத்து குழாய் மூலம் வினியோகம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் 35 கிராமங்கள் குடிநீர் இன்றி தவிப்பு
தற்போது ஏற்பட்டிருக்கும் பாதிப்பால் அந்த ஊர் மக்கள் விவசாய தோட்டங்களில் சென்று குடங்களில் தண்ணீர் கொண்டு வந்தும், காசு கொடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்கியும் பயன்படுத்துகிறார்கள். கோடைக்காலமும் வந்துவிட்டதால் தண்ணீர் பிரச்சினை பெரிதாகியுள்ளது. இதுபற்றி ஊர் மக்கள் தெரிவிக்கையில் விரிவாக்க பணிகள் முடிந்த நிலையிலும் இன்னும் குடிநீர் குழாய் சீரமைக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து, இந்த விஷயத்தில் அரசு தீவிரம் காட்டி குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.