என்.எல்.சி. சேதப்படுத்திய நெற்பயிர்கள் - ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க உத்தரவு
நெய்வேலி என்.எல்.சி.நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியினை மேற்கொள்ள சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரிவெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள விவசாயநிலங்கள் கடந்த 2007ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது என கூறப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட என்.எல்.சி.நிறுவனம் நிலத்தில் விளைந்திருந்த பயிர்களை சேதப்படுத்தியது. இது பெரும் அதிர்ச்சியினை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தியதையடுத்து, அறுவடை காலம் வரை விவாசாயிகளுக்கு இடையூறு அளிக்கக்கூடாது என உத்தரவிடுமாறு பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி இந்த வழக்கின் விசாரணை இன்று(ஆகஸ்ட்.,2)வந்த நிலையில், என்.எல்.சி. நிறுவனத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு தொகை வரும் ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் உரிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 7ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு
அதனை தொடர்ந்து, கையகப்படுத்திய நிலங்களை பாதுகாக்க தவறியது என்.எல்.சி. நிறுவனத்தின் தவறு, அதே போல் அந்த நிலத்தில் பயிரிட்டது விவசாயிகள் செய்த தவறாகும். எனவே, இருதரப்பினருமே தவறு இழைத்துள்ளனர் என்று கூறிய நீதிபதி, வரும் செப்டம்பர் 15ம் தேதிக்கு மேல் விவசாயிகள் அந்த நிலத்தில் எவ்வித பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்றும், அதன் பின்னர் அந்த நிலத்தினை பாதுகாத்து கொள்வது என்.எல்.சி. நிர்வாகத்தின் பொறுப்பு என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து, நில உரிமையாளர்கள் சட்ட ஒழுங்கினை மீறி ஏதேனும் செயலில் ஈடுபட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய நீதிபதி, இழப்பீடு தொகையினை வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் வழங்கிவிட்டால் ஆகஸ்ட் 7ம் தேதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தொடரும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.