பெங்களூரில் திருடிய தக்காளிகளை தமிழ்நாட்டில் விற்பனை செய்த தம்பதி கைது
பெங்களூர் ஆர்.எம்.சி.யார்டு காவல்துறைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து, சித்ரதுர்கா மாவட்டத்தினை சேர்ந்த விவசாயி போரலிங்கப்பா தனது நிலத்தில் விளைந்த 250கிலோ எடைகொண்ட தக்காளிகளை கோலார் சந்தைக்கு விற்பனை செய்ய லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது வழியை மறித்த மர்ம கும்பல் போராலிங்கப்பா மற்றும் அந்த லாரியின் ஓட்டுநரை மிரட்டி கூகுள் பே மூலம் ஆயிரக்கணக்கில் பணத்தினை பரிமாற்றம் செய்துகொண்டதுடன் நிற்காமல், தக்காளி லாரியையும் கடத்தி சென்றுள்ளனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டதில் அந்த லாரி தமிழ்நாடு நோக்கி சென்றுள்ளது என்று சிசிடிவி பதிவுகள் மூலம் காவல்துறை கண்டறிந்துள்ளது.
கடத்தலில் ஈடுபட்ட தம்பதி தமிழக காவல்துறை உதவியுடன் கைது
இதனிடையே, லாரியினை கடத்தி சென்ற அந்த மர்ம கும்பல் திருப்பத்தூர் ஆம்பூரில் அனைத்து தக்காளிகளையும் ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர். பின்னர் மீண்டும் பெங்களூர் திரும்பிய அவர்கள், எல்லை பகுதியிலேயே தாங்கள் சென்ற வாகனத்தினை நிறுத்திவிட்டு, நம்பர் பிளேட் இல்லாத வேறொரு வாகனத்தில் சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த தக்காளி கடத்தி விற்ற கும்பலின் தலைவர்களாக செயல்பட்ட சிந்துஜா மற்றும் பாஸ்கர் தம்பதியினரை பெங்களூர் போலீசார், தமிழக காவல்துறை உதவியுடன் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களுடன் இணைந்து செயல்பட்ட மற்ற 3 நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். தக்காளி திருடி விற்பனை செய்த இந்த வழக்கில் 5 நபர்கள் மீதும் ஐபிசி 346ஏ, 392 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.