சென்னை கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் - காவல்துறையினர் விசாரணை
சென்னை வேளச்சேரியில் செயல்பட்டு வரும் குருநானக் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் இன்று(ஆகஸ்ட்.,21) காலை மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பு மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட இந்த மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கிண்டி காவல்துறைக்கு கல்லூரி நிர்வாகம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள் மோதலில் ஈடுபட்டிருந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் கல்லூரி வளாகத்தில் வெடிக்காமல் இருந்த 2 வெடிகுண்டுகளை வெடிகுண்டு நிபுணர்கள் கண்டெடுத்துள்ளனர்.
கானா பாடல் பாடிய பொழுது ஏற்பட்ட மோதல்
கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகளை பரிசோதனை செய்து பார்த்ததில், அவை நாட்டு வெடிகுண்டு இல்லை என்பதும், சவ ஊர்வலத்தின் போது வெடிக்கப்படும் பட்டாசுகள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, பிடிப்பட்ட மாணவர்களை காவல்துறையினர் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதில், வெவ்வேறு பாடப்பிரிவில் 3ம் ஆண்டு படிக்கும் இருதரப்பு மாணவர்கள் இடையே கடந்த சில நாட்களாகவே மோதல் இருந்து வந்தது என்றும் தெரியவந்துள்ளது. அதன்படி, இன்று காலை கேன்டீனில் இருதரப்பினரும் கானா பாடல் பாடிய பொழுது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது என்று விசாரணையில் மாணவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.