'கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்த இந்திரா காந்தி': காங்கிரஸை கடுமையாக சாடும் பிரதமர் மோடி
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய இந்திரா காந்தியின் அரசாங்கத்தை இன்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நலன்களுக்கு எதிராக காங்கிரஸ் செயல்பட்டிருக்கிறது என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் கச்சத்தீவை இலங்கைக்கு எப்படி ஒப்படைத்தது என்பது தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் மூலம் சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில், இது குறித்து இன்று பிரதமர் மோடி பேசியுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அறிக்கை கண்களை திறந்து விட்டது என்றும், திடுக்கிடும் தகவலை கூறியுள்ளது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கச்சத்தீவுக்கு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள்
மேலும், "காங்கிரஸை ஒருபோதும் நம்ப முடியாது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். "கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி அநாகரிகமாக விட்டுக்கொடுத்தது என்பதை புதிய தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு இந்தியனையும் கோபப்படுத்தி, காங்கிரசை ஒருபோதும் நம்ப முடியாது என்பதை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவது காங்கிரஸின் செயல் முறையாகும்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய கடல் பகுதியில் மீன் வளம் குறைந்ததால் ராமேஸ்வரம் போன்ற மாவட்டங்களில் உள்ள தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு அருகே மீன் பிடிக்க அடிக்கடி செல்கிறார்கள். ஆனால், சில நேரம் மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை(ஐஎம்பிஎல்) தெரியாமல் கடந்து அந்த தீவுக்கு அருகே செல்வதனால் தான், அவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர்.