
18+ திரைப்படங்களை சிறுவர்கள் காண அனுமதிப்பதை தடுக்க கோரிய வழக்கு
செய்தி முன்னோட்டம்
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் என்று சான்று வழங்கப்படும் 'ஏ' சான்றிதழ் திரைப்படங்களை சிறுவர்கள் பார்க்க தடைவிதிக்க கோரிய வழக்கில் திரைப்பட தணிக்கை வாரியம் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பல திரையரங்குகளில் வயது வந்தோருக்கு மட்டும் திரையிட வேண்டிய திரைப்படங்களுக்கு சிறுவர்களையும் அனுமதிப்பதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்கள் மத்திய தணிக்கை வாரியத்தின் வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டிய இந்த மனு, அதை அவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இருந்தது.
சென்னை
7 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே கார்ட்டூன் பார்க்க வேண்டும்: மனுதாரர்கள்
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், திரைக்கு வந்து 3 மாதங்களுக்குள் டிவியில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்களை பார்க்கவிடாமல் எப்படி தடுப்பது என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், இதை பற்றி விவாதித்த மனுதாரர்கள், கார்ட்டூன் படங்களுக்கும் வயது வரம்பு உள்ளது, அதை 7 வயதுக்கு மேற்பட்டவர்களே பார்க்க வேண்டும். ஆனால் இந்த கார்ட்டூன்களையும் குழந்தைகள் வீட்டில் பார்ப்பதாக தெரிவித்தனர்.
மனுதாரர்களின் தரப்பை கேட்ட நீதிபதிகள், அந்த மனுவை தீர பரிசீலித்து முடிவெடுக்குமாறு திரைப்பட தணிக்கை வாரியம் மற்றும் மத்திய அரசின் பெண்கள்-குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ஆகியவைக்கு உத்தரவிட்டுள்ளது.